IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

செவ்வாய், 15 நவம்பர், 2011

பெண் தனியே பயணம் செய்யலாமா?-(பாகம் -2)

முரண்பட்ட செய்திகள:
 பெண்கள்
மஹ்ரமான துணை இல்லாமல் அதிகப்பட்சமாக எவ்வளவு தூரம் செல்லலாம் என்பது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறான அளவுகள் கூறப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு: 1. ஒரு நாள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது. 2. இரண்டு நாட்கள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது. 3. மூன்று நாட்கள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது. 4. ஒரு பரீத் தூரத்திற்கு ஒரு பெண் தனியே பயணம் செய்யக் கூடாது. (ஒரு பரீத் என்பது 12 மைல்களாகும். ஏறத்தாழ 19 கிலோ மீட்டார் இதன் தொலைவாகும்) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு நாள் தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1088) "ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி (1995) "அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் மூன்று நாட்கள் தொலைவுடைய பயணத்தை மணமுடிக்கத்தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் (2382) "ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) ஒரு பரீத் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: சஹீஹ் இப்னி குஸைமா (2350) இந்த நான்கு விதமான அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறான தூர அளவுகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றை ஏற்றால் மற்றவற்றை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இந்தச் செய்திகள் ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றை ஏற்று மற்றவற்றைப் புறக்கணிக்கவும் முடியாது. ஏனென்றால் இவை அனைத்தும் சமமான தரத்திலமைந்த செய்திகள். இரண்டு செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டால் அந்த முரண்பாடு நீங்கும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்க முடியாத வகையில் முரண்பாடு இருந்தால் அந்த இரண்டில் எது தரத்தில் உயர்ந்தது என்று பார்த்து உயர்ந்த தரத்தில் அமைந்த செய்தியை ஏற்று, தரத்தில் குறைந்த செய்தியை விட்டுவிட வேண்டும். முரண்பாடு நீங்காமலும் ஒன்றை விட மற்றொன்றை முற்படுத்த முடியாத வகையில் தரத்தில் சமமாகவும் அவை இருந்தால் இவற்றில் முந்தியது எது? பிந்தியது எது? என்று பார்க்க வேண்டும். முந்திய சட்டத்தை மாற்றப்பட்ட சட்டமாக முடிவு செய்து அதை விட்டுவிட வேண்டும். பிந்திய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். முந்தியது எது? பிந்தியது எது? என்பதை முடிவு செய்ய முடியாவிட்டால் ஒரே தரத்தில் அமைந்த, முரண்படும் இந்தச் செய்திகளை அமல்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். பெண் தனியே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட தூரத்தைப் பற்றிப் பேசும் மேற்கண்ட செய்திகள், இணைத்து விளக்கம் கூற முடியாத வகையில் முரண்படுகின்றன. இவை அனைத்தும் சமமான தரத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் முந்தி கூறப்பட்டது எது? பிந்தி கூறப்பட்டது எது? என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே இந்தச் செய்திகளில் எந்த ஒன்றையும் செயல்படுத்தாமல் இவை அனைத்தையும் விட்டுவிட வேண்டும். முரண்படாத செய்தி இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்.......